காப்பீட்டுத் திட்டத்தில் முறையாக சிகிக்சை அளிக்கவில்லை.. தூத்துக்குடி அரசு மருத்துவமனை மீது தொழிலாளி புகார்...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி மிக்கேல் ஜெயராஜ்.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் உள் நோயாளியாளராக சுமார் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் தினமும் புற நோயாளியாக வந்து செல்கின்றனர்.
இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருந்துகள் தட்டுப்பாடு என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மேலும், சிறப்பு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது இல்லை என்றும் புகார் உள்ளது.
இந்த நிலையில் நொச்சிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மிக்கேல் ஜெயராஜ் என்பவர் தனது வலது கையில் விரல்கள் மடங்கவில்லை என சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு முறையாகன சிகிச்சை அளிக்காமல் கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர் கூறியதை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து காப்பீடு திட்ட அட்டை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்தால் மருத்துவர்கள் தங்களை மீண்டும் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட மிக்கேல் ஜெயராஜ், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் அழுது புலம்பி உள்ளார்.
இதனைக் கண்ட மருத்துவமனைக்கு வந்தோர் அந்தக் காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தங்களுக்கு எந்தவித புகாரும் வரவில்லை என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் கூறும்போது, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொழிலாளி புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மருத்துவ மனையில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்றும் யாருகு அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலும் அவர்களுக்கு உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வருவதாகவும் சைலஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu