தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 6 வயது சிறுமி உயிரிழப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று உயிரிழந்த சிறுமி மகாலட்சுமி.
தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது ஆறு வயது மகள் மகாலட்சுமி. அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமியை பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.
மகாலட்சுமிக்கு கடந்த 20 நாட்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பபட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமி உயிரிழந்தது வைரஸ் காய்ச்சல் காரணமாக என்றும் அவரது மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் மகாலட்சுமியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளது.
ஆனால், சிறுமி மகாலட்சுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் வெள்ளை அனுக்கள் குறைவாக இருந்ததால் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கோரம்பள்ளம் அருகே உள்ள அபிராமி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த சிறுமி உள்ளிட்டோர் உயிரிழந்து உள்ளனர் என புகார் எழுந்துள்ளது.
ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை நிர்வாகம் அவற்றை வெளியே தெரிவிக்காமல் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியே காய்ச்சலுக்காக பொது மக்களுக்கு உதவ அமைக்கப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவு எப்பொழுதும் மூடியே கிடக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களுக்கு தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதால் சாதாரண ஏழை எளிய பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்க தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்லும் அவல நிலையும் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
சிறுமி மகாலட்சுமி உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபணியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
குழந்தை மகாலட்சுமி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடல் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். இங்கு மருத்துவமனையில் அந்த குழந்தைக்காக தனியாக செவிலியர்கள் மற்றும் டாக்டர் நியமிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. மகாலட்சுமியின் மருத்துவப் பரிசோதனையில் டெங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் இல்லை. சாதாரண காய்ச்சல் காரணமாகத்தான் குழந்தை இறந்தது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu