தூத்துக்குடி கடலில் தத்தளித்த கடமான்.. மீனவர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு...

தூத்துக்குடி கடலில் தத்தளித்த கடமான்.. மீனவர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு...
X

தூத்துக்குடி கடலில் தத்தளித்த கடமான் மீனவர்களால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.

தூத்துக்குடி கடலில் தத்தளித்த கடமானை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்தவர் மீனவர் ஜெரோம். இவர், இன்று அதிகாலை 5 மணி அளவில் முயல் தீவு கடற்பகுதி அருகே மீன் பிடிப்பதற்காக தனது பைபர் படகில் மூன்று மீனவர்களுடன் சென்றுள்ளார் . அப்போது அங்கே நடுக்கடலில் மான் ஒன்று தத்தளித்தபடி நீந்தி செல்வதை மீனவர்கள் பார்த்தனர். கடலுக்குள் மான் ஒன்று நீந்திச் செல்வதை கண்ட மீனவர்கள் உடனடியாக தாங்கள் வைத்திருந்த செல்போனின் அந்த காட்சியை படம்பிடித்தனர்.


அந்த மான் வெகுதூரம் நீந்திச் செல்ல வாய்ப்பு இல்லை என கருதிய மீனவர்கள் அந்த மானை மீட்டு கரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். தொடர்ந்து கடலில் நீந்திச் சென்றால் அந்த மான் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என கருதிய மீனவர் ஜெரோம் உடனடியாக கரைக்கு வந்த மற்றொரு பைபர் படகில் மேலும் சில மீனவர்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீண்டும் சென்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய மீனவர்கள் கடலில் தத்தளித்த மானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கடலில் இருந்து மான் மீட்கப்படட விவரம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையே, கடலில் இருந்து மீன் மீட்கப்பட்ட சம்பவம் குறித்த தகவல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அந்த மானை பார்வையிட திரண்டனர்.

இதற்கிடையே, மானை பார்வையிட்ட வனத்துறையினர் அது மிளா என அழைக்கப்படும் கடமான் வகையைச் சேர்ந்தது என்று தெரிவித்தனர். மேலும், ஓட்டப்பிடாரம் காட்டுப் பகுதியில் இருந்து தருவைகுளம் கடற்கரை வழியாக கடமான் கடலுக்குள் சென்று இருக்கலாம் என்றும் கடலில் நீந்தத் தொடங்கிய பிறகு வழி தெரியாமல் அந்த மான் தவித்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 4 அடி உயரமும் ஒரு அடி உயர கொம்புகளுடனும் இருந்த கடமான் 200 கிலோ எடைக்கும் மேல் இருக்கும் என்று கூறிய வனத்துறையினர் மீனவர்களின் உதவியுடன் அந்த மானை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள சாலிகுளம் வனப்பகுதியில் விட்டனர். கடலில் தத்தளித்தக் கொண்டிருந்த மானை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீனவர் ஜெரோமிற்கு வனத்துறையினரும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil