தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம்: 10 இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிராக போராடிய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, கலவரம் வெடித்ததால் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டிலும், தாக்குதலிலும் 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனவர்களுக்கு ஆண்டுதோறும் மே 22 ஆம் தேதி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதற்கிடையே, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காவல் துறை அனுமதி பெற்று 10 இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூத்துக்குடி பாத்திமா நகரில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உருவப்படத்திற்கு பாத்திமா நகர் பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், திமுக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சிறப்பு சட்டம் நிறைவேற்றவேண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர் .
இதேபோன்று தூத்துக்குடி தொம்மையார் கோயில் பகுதியிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu