தூத்துக்குடியில் தாய், மகன் உள்பட 5 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் தாய், மகன் உள்பட 5 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 270 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14.01.2023 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி முத்துநகர் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த ராபின்சன் (வயது 24), தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கன்னபெருமாள் (22) உட்பட சிலரை தென்பாகம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான ராபின்சன் மற்றும் கண்ணபெருமாள் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 20.01.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் பகுதியில் வைத்து மந்திதோப்பு துளசிங்காநகரை சேர்ந்த வெயில்காளை (44) என்பவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த மகேஷ்குமார் (39) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். கைதான மகேஷ்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 30.01.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மெயின் ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் முத்தையாபுரம் ஜே.எஸ் தெருவை சேர்ந்த மாரியம்மாள் (49) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (22) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கைதான மாரியம்மாள் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து, வழக்குகளில் கைதான தூத்துக்குடி முத்துநகர் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த ராபின்சன் , தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கன்னபெருமாள், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த மகேஷ்குமார், முத்தையாபுரம் ஜே.எஸ் தெருவை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் உத்தரவின் பேரில் 5 பேர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!