தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்குகளில் கைதான இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2.2.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த சிவராமலிங்கம் (31) என்பவரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

கொலை முயற்சி வழக்கில் கைதான சிவராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 29.01.2023 அன்று திருசெந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சாத்தான்குளம் புதுக்குளம் காலனியை சேர்ந்த தேவராஜ் (32) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட தேவராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரி மனோகரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இரண்டு காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், சிவராமலிங்கம் மற்றும் தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். அதன் பேரில், ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த சிவராமலிங்கம் மற்றும் சாத்தான்குளம் புதுக்குளம் காலனியை சேர்ந்த தேவராஜ் ஆகிய இருவரையு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவரும், கொலை முயற்சி வழக்கில் கைதான சிவராமலிங்கம், போக்சோ வழக்கில் கைதான தேவராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story