தூத்துக்குடி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
X

தீப்பெட்டி தயாரிக்கும் பணி - கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று முதல் ஏப்ரல் 22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பேக்கேஜிங் யூனிட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், இளையரசனேந்தல், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட் எனப்படும் சார்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்ற தீப்பெட்டிகள் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும், ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ரூ.20க்கும் கீழ் உள்ள சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும், சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் ரூ.10க்கு விற்கப்படுவதால் வடமாநிலங்களில் தீப்பெட்டி விற்பனை பாதியாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி குறைந்து வருவதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை லாபகரமாக நடத்த முடியாத அளவிற்குச் சுழல் ஏற்பட்டுள்ளதாகவும், உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் ஸ்டாக் அதிகமாக இருப்பதினால் மூலப் பொருள்கள் வாங்கிய நபர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழ்நிலைக்குத் தற்காலிகமாகத் தீர்வு காணும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 10 நாள்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உற்பத்தி செய்வதை நிறுத்தம் செய்துள்ளனர். அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.6 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story