தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கைதான நான்கு பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த 19.02.2023 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (46) என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த கணேசன் (32), தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர்களான இசக்கிமுத்து (35) மற்றும் முருகன் (30) மற்றும் சிலரை கயத்தாறு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலை முயற்சி வழக்கில் கைதான கணேசன், இசக்கிமுத்து மற்றும் முருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதேபோல, கடந்த 30.12.2022 அன்று சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குகட்பட்ட கருங்குளம்- ராமனுஜம்புதூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்து காவலாளிகளை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கு இருந்த 37 ஆடுகளை சரக்கு வாகனத்தில் திருடிச் சென்ற வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்துபாண்டி (28) மற்றும் சிலரை சேரகுளம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சேரகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு வகிக்கும் அன்னராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இரு காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கயத்தாறு புதுகாலனியை சேர்ந்த கணேசன், தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த இசக்கிமுத்து, அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்துபாண்டி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில், நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல் ஆய்வாளர்கள் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story