கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்ட ஆட்சியர்!

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்ட ஆட்சியர்!
X

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உள்ள பண்ணை மற்றும் ஆராய்ச்சி திடல்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் தோட்டக்கலைத் துறையில் உள்ள பண்ணை மற்றும் ஆராய்ச்சி திடல்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தோட்டக்கலைத் துறையில் உள்ள பண்ணை மற்றும் ஆராய்ச்சி திடல்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் தோட்டக்கலைத் துறையின் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, மலர் பயிர்கள், மரப்பயிர்கள், மூலிகைப் பயிர்கள், பனை போன்ற உயர்தர நாற்றுகள் பயிரிடப்பட்டு உள்ளன. மேலும், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து 265 பனை இனங்கள் சேகரித்து பண்பாட்டு கருவூலகத்தில் பராமரிக்கப்படுகிறது.


அதுமட்டுமின்றி, கல்லூரியில் உள்ள மூலிகை பண்ணையில் உள்ள ராசி தோட்டம், நட்சத்திர தோட்டம், 500-க்கும் அதிகமான மூலிகை பண்ணை கருவூலம் போன்றவை பராமரிக்கின்றன. பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பதனீர் பதப்படுத்தும் கருவியையும் தயாரித்து உள்ளனர். கல்லூரியில் உள்ள நாற்றங்கால், பனை இனங்கள் மற்றும் கருவிகளை பார்வையிட்டேன்.

பனை ஆராய்ச்சியில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இந்திய அளவில் மிகச்சீரிய பணியாற்றி வருகிறது. குறிப்பாக, பனையில் அதிக மகசூல் தரும் ரகங்கள், குட்டை ரகங்கள், பதனீரை கெடாமல் பதப்படுத்துதல், பனையேறும் உபகரணங்கள் வடிவமைத்தல் போன்ற ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், பாலீதின் பைகளில் பனை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அது விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநர் பழனி வேலாயுதம், தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடிமணி, தோட்டக்கலைத் துறை தலைவர் ரிச்சர்டு, பேராசிரியர்கள் ஆல்வின், சபரிநாதன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!