உதவி கேட்ட பிளஸ் 2 மாணவியின் தாய்.. உடனடியாக நிறைவேற்றிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
சாத்தான்குளத்தில் லெட்சுமி வீட்டில் மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரம் 13 ஆவது வார்டு வீர இடக்குடித்தெருவை சேர்ந்த ஆறுமுகம்- லெட்சுமி தம்பதியின் மகள் பேச்சித்தாய். இவர், தற்போது பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். பேச்சிதாயின் சகோதரர் ஐயப்பன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வந்தனர்.
இந்தநிலையில், தற்போது பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் லெட்சுமி தனது மகளின் படிப்புக்கு உதவியாக இருக்கம் வகையில், வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனடியாக லெட்சுமியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் உடனடியாக லெட்சுமியின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும், உடனடியாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் உரிய முறையில் விண்ணப்பம் செய்து மின் இணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர்.
இதற்கிடையே, லெட்சுமி கஷ்டமான சூழலில் இருப்பதாக அறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மின் இணைப்பு பெறுவதற்கான வைப்புத்தொகையை தனது விருப்ப நிதியில் இருந்து செலுத்தினார். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் லெட்சுமியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் வீடு முழுவதும் உடனடியாக மின்வயர்கள் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு மின் விளக்குகளால் லெட்சுமியின் வீடு ஒளிரூட்டப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக லெட்சுமி கூறும்போது, மின் இணைப்பு கேட்டு கோரிக்கை விடுத்து, ஒரே நாளில் அதுவும், தனது விருப்ப நிதியில் இருந்து வைப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுத்தந்து தனது மகளின் கல்விக்கு ஒளியூட்டிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu