தூத்துக்குடி மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் உலக அளவில் வளர்ச்சி அடையும்.. ஆட்சியர் தகவல்...

தூத்துக்குடி மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் உலக அளவில் வளர்ச்சி அடையும்.. ஆட்சியர் தகவல்...
X

தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி கருத்தரங்கில் பங்கேற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தென்னிந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்துவரும் மாவட்டமாக உள்ளது. இங்கே சாலை மார்க்கம், ரயில் மார்க்கம், ஆகாய மார்க்கம், கடல் வழி மார்க்கம் என அனைத்து போக்குவரத்து வளர்ச்சியும் பெற்று வருகிறது. தென்னிந்தியாவை மையப்படுத்தி பலர் இங்கு முதலீடு செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு தென்மாவட்டங்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிவருகிறது.

இங்கே சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் உள் துறைமுக வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

விமான நிலைய ஓடுதளம் 1.3 கிலோ மீட்டரில் இருந்து 3.1 கிலோ மீட்டர் வருகிறது. விமான நிலையத்தில் புதிதாக பயணிகள் முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின் தற்போது செயல்பட்டு வரும் பயணிகள் முனையம் மூலமாக சரக்குப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதன் பின்னர், இங்கிருந்து சரக்கு விமானங்கள் சென்னை, டெல்லி, மும்பை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.


மேலும், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது. இந்த ஏவுதளத்திலிருந்து சிறியவகை செயற்கைக்கோள்கள், தனியார் செயற்கைக்கோள்கள் அனுப்பவும் வாய்ப்பாக அமையும். இது தகவல் தொழில்நுட்பத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக சுமார் 90 சதவிகிதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்த பின்னர் தமிழ்நாடு ராக்கெட் உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளம் என இரண்டையும் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமையை பெரும்.

தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை இரட்டை வழி சாலைப் போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உலர் உணவு தொழிற்சாலை அமைப்பிற்காக சுமார் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை எடுப்பதற்காக 12 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிப்காட் விரிவாக்கத்திற்காக 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக அல்லி குளத்தில் 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குறு சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சிக்காக தொழில் பயிற்சி அளித்தல், கடன் முகாம்கள் நடத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கருத்தரங்கில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தமிழ்நாடு துணைத் தலைவர் சங்கர் வானவராயர், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தூத்துக்குடி தலைவர் தாமஸ் ஆண்டனி, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தூத்துக்குடி துணைத் தலைவர் வெயிலா ராஜா, இந்திய தொழில் கூட்டமைப்பபு (சி.ஐ.ஐ) தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ராஜா, தொழில்முனைவோர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் சார்ந்த வர்த்தகர்கள், வாங்கியாளர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!