தூத்துக்குடி மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: ஆட்சியர் தகவல்
X

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தினமும் காலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 9 மணிக்கு திரும்பும் வகையில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால், இரவு 8 மணி முதலே மீன்பிடி துறைமுகம் மிகவும் பரபரப்புடன் காணப்படும்.


இந்த நிலையில், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்களிடையே வட்டப் பணம் பிரிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் விசைப்படகு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விசைப்படகு தொழிலாளர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்க்க மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விசைப்படகு தொழிலாளர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.


இந்தநிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே உள்ள பிரச்னையை தீர்ப்பதற்காக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

விசைப்படகு தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது மேலும் தூத்துக்குடி விசைபடகு மீன்பிடி துறைமுக பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் சேவியர், வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் உடனிருந்தனர்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான பிரச்னையை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்காக இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!