தூத்துக்குடி மாவட்ட பால் வியாபாரிகளுக்கு ஆட்சியர் திடீர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட பால் வியாபாரிகளுக்கு ஆட்சியர் திடீர் எச்சரிக்கை
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லறை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விற்பனையாளர்கள் பாலில் எந்தவித கலப்படமும் இல்லாமல் உரிய அளவிலும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி, தவறும் பட்சத்தில் கலப்படம் செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் நடைபெறும் கலப்படம் மற்றும் எடையளவு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளைக் கண்காணித்து, அதனை தடுக்கவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் பல்துறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

பச்சிளம் குழந்தைகள் ஆரம்பித்து பெரியோர் வரை தேவையான அதிமுக்கியமான உணவு பால் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகின்றது. ஆனால், பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்காங்கே சில இடங்களில் தண்ணீர் கலப்படமும், அளவில் மோசடியும் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வருகின்றது.

எனவே, அந்த மாதிரியான மோசடிகளைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஒருங்கிணைப்பில், உணவு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலத்துறை, பால் வளத்துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழு மார்ச் 8 ஆம் தேதி முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். அந்த ஆய்வின்போது, தவறு நடைபெறுவதை உறுதி செய்யும்பட்சத்தில், அவரவர் துறை சார்பான நடவடிக்கை எடுப்பார்கள்.

உணவு பாதுகாப்புத் துறையானது, உணவு மாதிரி எடுக்கும் பணி தவிர, நியமன அலுவலர் மூலமாக பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வில் தரம் குறைவான பால் என்று கண்டறியப்படும் பட்சத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. எடையளவில் மோசடி கண்டறிந்தால், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

கலப்படம் அல்லது எடையளவில் மோசடி செய்யும் பால் உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்களை பால் சொசைட்டியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை பால் வளத்துறை மேற்கொள்ளும். எனவே, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களது தவறை திருத்திக் கொண்டு, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான பாலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பால் கலப்படம் குறித்து நுகர்வோர் புகார் அளிக்க விருமபினால், 9444042322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது 8680800900 என்ற கால் யுவர் கலெக்டர் எண்ணிற்கோ புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!