தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் ரூ. 37 லட்சம் மோசடி.. நைஜீரியா இளைஞர் கைது...
ஆன்லைன் மோசடியில் கைது செய்யப்பட்ட நைஜீரியா இளைஞர் இஷி பெடிலிஸ் நுடுபியூஸி மற்றும் அவரை கைது செய்த போலீஸார்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38). அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் Vetis Animal Health Industry என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அந்த தகவலை உண்மை என நினைத்து 36 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டதாகடி பனிமய கிளாட்வின் மனோஜ் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அவரது புகார் மனு குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில் உள்ள சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) (வயது 42) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்தும், போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீஸார் எதிரி இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) என்பவரை மும்பை சென்று மும்பையில் உள்ள உல்வே நோட் என்ற பகுதியில் வைத்து கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல் பல நபர்களை இஷி பெடிலிஸ் நுடுபியூஸி ஏமாற்றி இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட இஷி பெடிலிஸ் நுடுபியூஸியை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu