சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை.. தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு..

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை.. தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு..
X

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் கீதாஜீவன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் பெரியசாமி. இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் தற்போதைய சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்தார்.

இந்த நிலையில் பெரியசாமி மற்றும் அவரது மனைவி எபனேசர், மகள் கீதா ஜீவன், மூத்த மகன் ராஜா, இளைய மகன் ஜெகன் பெரியசாமி, கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் ஜீவன் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அவர்கள் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட போலீஸார் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் முதன்மையாக மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி சேர்க்கப்பட்டார். இரண்டாவதாக அவரது மனைவி எபனேசர், மூன்றாவதாக மூத்த மகன் ராஜாவும், நான்காவதாக இளைய மகனும் தற்போதைய மேயருமான ஜெகன் பெரியசாமியும், ஐந்தாவதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப்பும், ஆறாவதாக தற்போதைய அமைச்சரான கீதா ஜீவனும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி கடந்து 2017 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இருப்பினும் அவரைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அனைவரும் விடுதலை:

இந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர் மீதான சொத்து குறிப்பு வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு என்பதால் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதனால், சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் அவர்கள் பங்கேற்க இயலவில்லை.

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனதும் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனடியாக சென்னை புறப்பட்டுச் சென்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் திமுகவினர் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்