இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை.. தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு…
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்னை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி சந்தேகம்படும்படியான வகையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, க்யூ பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லிட்டில் ஹாம்டன்நகர் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என தெரியவந்தது. மேலும், அவரிடம் எந்தவித ஆவணங்களுக்கும் முறையாக இல்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜோனாதன் தோர்ன் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் என்றும் அவர் மீது மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது. மேலும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் 40 கோடி ரூபாய் மதிப்பிலான கேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்து பொருட்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோனாதன் தோர்னை கைது செய்து சிறையில் அடைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜோனாதன் தோர்ன் பல்வேறு வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு வந்து உள்ளார் என்றும் இங்கிருந்து சில இடைத்தரகர்களை அணுகியதும் தெரியவந்தது. மேலும், அந்த இடைத்தரகர்கள் மூலம் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி படகு மூலம் இலங்கைக்கு அவர் தப்ப முயற்சி செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ஜோனாதன் தோர்னை கைது செய்த க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான கியூ பிரிவு போலீஸார் இலங்கைக்கு தப்ப முயன்ற ஜோனாதன் தோர்னை தூத்துக்குடி முதலாவது நீதிமன்ற நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி குபேர சுந்தர், உரிய ஆவணம் இன்றி இலங்கைக்கு படகுமூலம் தப்ப முயன்ற வழக்கில் கைதான போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜோனாதன் தோர்னுகு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜோனாதன் தோர்னை போலீஸார் பாதுகாப்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஜோனாதன் தோர்னுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதன் பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu