முறைகேடாக குடிநீர் உறிஞ்சினால்... தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார். (கோப்பு படம்).
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சப்படுவதாக எழுந்த புகார் குறித்து ஆணையர் தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்று படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது வரை போதிய மழை பெய்யாத நிலையிலும் தூத்துக்குடி மாநகர வாழ் மக்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முறையாக நடைபெற்று வருகிறது.
மேலும், குடிநீர் விநியோகத்தின் போது எதிர்பாராமல் அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடிய நீர்க்கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஆகியவற்றை உடனுக்குடன் சரி செய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காவண்ணம், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குடிநீர் இணைப்பு கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஏழு தினங்களுக்குள் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தினசரி 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் மாநகராட்சி குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக நீர் உறிஞ்சுதல் மற்றும் குடிநீர் குழாயினை சேதப்படுத்தி அனுமதியின்றி குடிநீர் குழாய் பழுது பார்த்தல் போன்ற மாநகராட்சிக்கான வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தவறான செயல்பாடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுபோன்ற முறைகேடான செயல்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான அரசாணை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் உப விதிகளுக்கு முரணானதாகும். எனவே, மாநகராட்சியின் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் தங்களது குடிநீர் இணைப்பினை வரன்முறை படுத்துவதற்கு ஏதுவாக தாமாக முன்வந்து மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய கட்டணம் மற்றும் அபராத தொகையினை செலுத்த தெரிவிக்கப்படுகிறது.
மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கள ஆய்வின்போது முறைகேடான செயல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் மேற்படி குடிநீர் இணைப்பானது நிரந்தரமாக துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், குடிநீர் குழாய் இணைப்புகள் பழுது ஏற்படும் நிலையில் மாநகராட்சியில் உரிய கட்டணங்களை செலுத்தி அனுமதி பெற்று மாநகராட்சி குடிநீர் விநியோக பணியாளர்கள் முன்னிலையில் பணி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
குடிநீர் விநியோகம் தொடர்பான அனைத்து விதமான புகாரையும் மாநகராட்சி அலுவலர்களை நேரடியாக சந்தித்து விவரம் தெரிவித்து தீர்வு காண தெரிவிக்கப்படுகிறது. மாறாக, மாநகராட்சிக்கு தொடர்பில்லாத இடைத்தரகர்களை அணுகி மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடான செயலில் ஈடுபடுவதன் மூலம் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu