தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவு..

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவு..
X

தூத்துக்குடியில் கொலை நிகழ்ந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும், சோரீஸ்புரம் பகுதியில் நகை அடகு கடையும் நடத்தி வந்தார். இந்த நிலையில், வழக்கம்போல, நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு முத்துக்குமார் இன்று மாலை தனது காரில் சோரீஸ்புரத்தில் உள்ள நகை கடைக்கு சென்றார்.


அவர் காரை விட்டு இறங்கும் போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் எதிர்பாரதவிதமாக முத்துக்குமாரை சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முத்துக்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும், அவரை துரத்திச் சென்ற அந்த கும்பல் முத்துக்குமாரை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

கொலையுண்ட முத்துக்குமாரின் நகை அடகு கடை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே அமைந்துள்ளது. முத்துக்குமாரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியபோது அவரது நகை அடகு கடையில் இருந்த பெண்கள் மற்றும் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முன்விரோதம் காரணமா?:

கொலையுண்ட முத்துக்குமாரின் சகோதரரான வழக்கறிஞர் சிவகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார். கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சிவகுமார் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தில் ஏற்கெனவே கொலையுண்ட ஆத்திப்பழத்தின் சகோதரர் ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் ராஜேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனவே, முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர்.


கொலையுண்ட வழக்கறிஞர் முத்துக்குமார் தரப்பிற்கும், சிறையில் உள்ள ராஜேஷ் தரப்பிற்கும் கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதால் கொலை நிகழ்ந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 தனிப்படைகள் அமைப்பு:

வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை தொடர்பாக சிப்காட் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீஸார் கொலை நிகழ்ந்த இடம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil