கரைகள் சேதம் அடைந்த எப்போதும் வென்றான் அணையில் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

கரைகள் சேதம் அடைந்த எப்போதும் வென்றான் அணையில் தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு
X

எப்போதும் வென்றான் அணையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

எப்போதும் வென்றான் அணையின் கரைகள் சேதம் அடைந்ததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக தூத்துக்குடி அருகேயுள்ள எப்போதும்வென்றான் கிராமத்தில் பொதுபணித் துறைக்கு பாத்தியப்பட்ட எப்போதும் வென்றான் அணைக்கட்டின் அருகே கரை சேதமடைந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அப்போது, எப்போதும் வென்றான் அணைக்கட்டின் மூலம் எப்போதும்வென்றான் மற்றும் காட்டுநாயக்கன்பட்டி கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதாகவும், உடனடியாக சேதமடைந்த கரையை மணல்மூடைகளை கொண்டு பலப்படுத்துமாறும், தொடர்ந்து கண்காணிக்குமாறும் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரிடம் அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், எப்போதும்வென்றான் கிராமத்திற்கு மேற்கே 0.25 கி.மீ தொலைவில் எப்போதும்வென்றான் அணைக்கட்டு அமைந்துள்ளது. இது 443.11 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பு கொண்ட முறைசாரா கண்மாய் ஆகும். கல்லாறு வடிநிலத்தில் அமைந்துள்ள இக்கண்மாயின் தனித்த நீர்ப்பிடிப்பு 56.05 சதுரமைல் மற்றும் ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு 155.05 சதுர மைல் ஆகும். இக்கண்மாய்க்கான நீர்வரத்து 18 கி.மீ நீளமுள்ள மலட்டார் ஓடைகளின் வழியாக கிடைக்கப்பெறுகின்றது.

இந்தக் கண்மாயின் உபரி நீர் 193மீ நீளமுள்ள கலிங்கு வழியாக உபரிநீர் கால்வாயான கல்லாற்றில் வெளியேற்றப்படுகிறது. இக்கல்லாறானது எப்போதும்வென்றான் கண்மாயிலிருந்து 24 கி.மீ. பயணித்து வங்காளவிரிகுடாவில் கலக்கின்றது. இந்த அணையின் கரைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது ஏற்படும் அலைகளினால் கரை அரிப்புகள் ஏற்பட்டுள்ளது.

எனவே கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயக்கட்டு இடைவெளி சீராகி மகசூல் அதிகரித்து எப்போதும்வென்றான் மற்றும் காட்டுநாயக்கன்பட்டி கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள் மற்றும் மக்களின் சமூக நிலை மேம்படும்/

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் நிர்வாக பொறியாளர் வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story