தூத்துக்குடி கலெக்டரின் கையெழுத்தை போலியாக போட்ட நபர் மீது நடவடிக்கை தேவை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர் தலைமையில் நிர்வாகிகள் பலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் ஆட்சியரின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளதாக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் கிராமத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிராங்ளின் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். பிராங்ளின் மீரான்குளம் கிராமத்தில் கல்குவாரி நடத்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு அதே ஆவணங்களை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார்.
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் சுரங்கத் துறை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக உருவாக்கி புதிதாக சர்வே எண்களை இணைத்து ராதாபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளாதாக கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் கையெழுத்து உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக உருவாக்கியதை தொடர்ந்து சாத்தான்குளம் மீரான் குளம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஆனால், கல்குவாரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்ட பின்பும் போலி கையெழுத்து போட்ட பிராங்ளின் மீது இதுவரை குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர் கைது செய்யப்படாமல் உள்ளார். மாவட்ட ஆட்சியர் கையெழுத்தை போலியாக போட்ட நபர் மீது மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் மணல், கல் உள்ளிட்ட கனிமவளங்கள் கொள்கை நடைபெற்று வருகிறது. இந்த கனிமவள கொள்ளை மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.
இனியும் நடவடிக்கை எடுக்காகாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் அரசு துறைகளில் தமிழருக்கு நூறு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் 90 சதவீதம் தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu