விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த தூத்துக்குடி ஆட்சியர்
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற ஆட்சியர் செந்தில்ராஜ்.
தூத்துக்குடியில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது வாகனத்தில் ஏற்றி சென்று சிகிச்சை அளிக்க உதவினார்.
தூத்துக்குடி தெர்மல்நகர் காதர்மீரான் நகரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பழனி தனது நண்பரான தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கல்லூரி மாணவரான கருப்பசாமி என்பவருடன் பீச்ரோடு துறைமுகம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 8 ஆவது தெருவை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவரின் இருசக்கர வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கருப்பசாமி, ஸ்டீபன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. பழனி என்பவர் காயமின்றி தப்பினார்.
அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விபத்து நிகழ்ந்திருப்பதை கண்டதும் தனது வாகனத்தில் இருந்து இறங்கி உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார். விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மீட்டு தனது வாகனத்திலேயே கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதாபிமான செயல் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் அதனை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu