பட்டாசு விற்பனை நிலையங்களை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு

பட்டாசு விற்பனை நிலையங்களை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு
X

தூத்துக்குடியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களை ர் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்களில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில், 15 கிலோவுக்கு கீழே உள்ள வெடி மருந்துகளை கையாளும் 9 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், 15 கிலோவில் இருந்து 500 கிலோ வரை வெடிமருந்துகளை கையாளும் 8 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையில் இருக்கின்ற பெசோ என்று சொல்லக்கூடிய அமைப்பின் மண்டல அலுவலகமும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த 17 பட்டாசு தொழிற்சாலைகளிலும், 165 தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், 184 பட்டாசு விற்பனை கடைகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீ தடுப்பு மற்றும்மீட்பு துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய 3 கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கண்காணிப்பு குழுவினர் அவ்வப்போது, பட்டாசு ஆலைகள், விற்பனை நிலையங்கள், தீப்பெட்டி உற்பத்தி ஆலைகளில் உரிய வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுகிறதா? என நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் குருசந்திரன் (திருச்செந்தூர்), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துணை இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story