ஆசிரியர்கள் மீது தாக்குதல்: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ நம்பிபுரம் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குருவம்மாள் என்பவரும், மேலும் சில ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவி தன்னை தலைமையாசிரியர் அடித்ததாக தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் திடீரென பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பரத் ஆகியோரை சரமாரியாக தாக்கினராம். இதனை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதலங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆசிரியர் பள்ளிக்குள் புகுந்து தாக்கியவர்களையும், பள்ளி வகுப்பறைகளை சேதப்படுத்தியவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, ஆசிரியர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக மாணவியின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து செய்தனர். மேலும், செல்வியின் தாய் மாரிச்செல்வியும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்த குற்றவாளிகளால் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே இதே போன்று ஊர் மக்கள் அனைவரிடமும் அவர்கள் சண்டையிட்டு வீட்டில் வைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் காவல் நிலையத்தில் ஊர் மக்கள் மீது பொய் புகார் அளித்து வருகின்றனர் என்றும் இதற்கு எட்டையாபுரம் காவல் துறையினரும் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கைதான குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய கிராம மக்கள், அதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu