அமலிநகர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை கிராமத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் தூண்டில் வளைவு அமைக்க ரூ. 58 கோடி ஒதுக்கியது. ஆனால் ஓராண்டாகியும் பணிகள் துவங்கவில்லை.
இதையெடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 10 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து கடலில் இறங்கி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் தூண்டில் நுழைவு அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து ஆறு மாதங்கள் ஆகியும் தூண்டில் விளைவு அமைக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அமலி நகர் மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த எட்டு நாட்களாக கடலுக்கு செல்லாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் மீனவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி ஆட்சியர் அலுவகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமலிநகரில் தூண்டில் வளைவு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் வதந்திகளை நம்பாமல் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வர வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவுகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
கடலோர ஒழுங்காற்று முறை வரைபடம் விரைவில் தயார் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிட்ட பின்பு வரும் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்லது.
அதன் பின்பு தூண்டில் வளைவு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu