தூத்துக்குடியில் 4 கிராம் கம்மலுக்காக மூதாட்டி கொலை-இருவர் கைது

தூத்துக்குடியில் 4 கிராம் தங்க கம்மலுக்காக 62 வயது மூதாட்டியை கொலை செய்த பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட இருவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி பவானி ( வயது 62). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து துணியால் கழுத்தை இறுக்கி, கட்டையால் தாக்கி பவானியை கொலை செய்து தப்பிவிட்டனர். மேலும் அவர் அணிந்திருந்த ரூபாய் 15,000 மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
இதையடுத்து சிப்காட் போலீசார் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொழில் நுட்ப ரீதியாகவும் மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தூத்துக்குடி எட்டயாபுரம் ரோடு, ஹவுசிங் போர்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மகன் நவநீதகிருஷ்ணன் (25) மற்றும் முத்தம்மாள் காலணியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சதீஷ் கண்ணன் (26) இருவரும் இரு சக்கர வாகனத்தில் பவானி வீட்டிற்கு சென்றுள்ளனர். பணம் மற்றும் ரொக்கம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பவானி வீட்டிற்குச் சென்று, அவரை துணியால் கழுத்தை நெறித்து, கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அங்குள்ள பீரோ மற்றும் பொருட்கள் வைத்திருக்கக்கூடிய இடங்களில் ஏதாவது கிடைக்கும் என்று தேடியுள்ளனர்.
எதுவும் கிடைக்காததால் ட பவானி அணிந்திருந்த ரூபாய் 15,000/- மதிப்புடைய 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்கள் பறித்துச் சென்ற தங்க கம்மலையும், எதிரிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, தூத்துக்குடி மாவட்டத்தில் தவறு இளைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடரும். இதுவரை 53 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க 5 ஸ்பெஷல் டீம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோக முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்காணிக்கவும் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டுள்ளது. கஞ்சா தொடர்பாக என்ன தகவல் என்றாலும் பொதுமக்கள் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். அச்சப்பட வேண்டிய தேவையில்லை தொடர்ந்து கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களுக்கு நான்கு சக்கர வாகனம் கொடுக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu