புத்தகக் கண்காட்சிக்கு வாங்க.. ஒரு லட்சம் ரூபாய் பரிசை வெல்லுங்க.. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..
மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் புத்தகத் திருவிழா என்ற பெயரில் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது.இன்று தொடங்கியது. நவம்பர் 29 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புத்தகத் திருவிழாவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:
உலகில் உள்ள விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான். பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும்.
தான் படித்த புத்தகத்தை படித்து முடித்தபின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனக்கு நண்பர்களாக என் வாழ்க்கை முழுவதும் புத்தகங்கள் இருந்து வருகின்றன. புத்தகங்கள் இருக்கும்பொழுது ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு புது உலகத்தில் வாழ முடியும்.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டது. எழுத்தாளர்கள் எழுதுவதற்கு தடை செய்யப்பட்டார்கள். சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள். இன்றும் எழுத்தாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தினை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
புத்தகங்களை தேடித்தேடி தனது சிந்தனையை செதுக்கிக் கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்து இருக்கிறார்கள். எது நமது அடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக்கூடியது புத்தகங்கள்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற கரிசல் இலக்கியம்தான் இன்றைக்கு நாம் கொண்டாடக்கூடிய நாட்டார் கதைகளாக மாறியிருக்கின்றன. கிராமிய கலைகளை கொண்டாடக்கூடிய நிலையை அந்த எழுத்துக்கள் உருவாக்கி இருக்கின்றன. அனைவரும் படிப்பதற்காக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சம் ரூபாய் பரிசு: இந்த நிலையில், புத்தகக் கண்காட்சி தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம் வருமாறு:
புத்தகத் திருவிழாவில், ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் கட்டணச் சீட்டுடன் தங்களது பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை இணைத்து அரங்கின் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
முதலாவது பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu