தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதக் கிடங்கில் எஸ்.பி. திடீர் ஆய்வு
ஆயுதக்கிடங்கை ஆய்வு செய்யும் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று காலை திடீரென சென்று ஆயுதப்படையில் உள்ள ஆயுத கிடங்கை பார்வையிட்டு ஆயுதங்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
மேலும், ஆயுதப்படை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா? என்றும் அவர் ஆய்வு செய்தார். பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல், ஏதாவது குறைகள் இருந்தால் தன்னை நேரடியாக சந்தித்து எந்த நேரத்திலும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறியதோடு காவலர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பார்வையிட்டு காவலர்களுடன் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கைப்பந்து விளையாடினார். அதன் பிறகு காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களிடம் எவ்வளவு பணிகள் இருந்தாலும் உடற்பயிற்சியும் மிக முக்கியமானது, தினமும் இயன்றளவு உடற்பயிற்சி செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.
மேலும், ஓய்வு நேரங்களில் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், காவல் நிலையங்களை நாடி வரும் பொது மக்களிடம் கனிவான முறையில் நடந்து, அவர்களின் புகார்களை கேட்டறிந்து, உயரதிகாரிகளின் அறிவுரைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டபோது தூத்துக்குடி ஆயுதப்படையில் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், வெள்ளைத்துரை உட்பட பல ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்தனர். அதே போன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற உடற்பயிற்சியை பார்வையிட்ட போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் அந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu