தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடுதல் நிகழ்ச்சி.. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு..
தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்ட உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
நாடு முழுவதும் உலக மீனவர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில், உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மின்குஞ்சுகளை ஆற்றில் விடும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் அமல் சேவியர், மாவட்ட உதவி இயக்குநர்கள் விஜயராகவன், அண்டோ பிரின்சி வயலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 இன் கீழ் தாமிரபரணி மற்றும் வைகை ஆறுகளில் 10 லட்சம் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக ரூ. 27 லட்சம் நிதி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் உலக மீன் வள தினத்தையொட்டி, தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் மீன் வளத்தை பாதுகாத்து பெருக்கிடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சேல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற நாட்டின சிறு கெண்டை மீன்களை அழியும் இனத்தில் இருந்து பாதுகாப்பதற்காகவும், கட்லா, ரோகு மற்றும் மிர்கால் போன்ற நாட்டின பெருங்கெண்டை மீன்கள் பெருக்குவதற்காகவும் 2 லட்சம் எண்ணிக்கையிலான நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டது.
மேலும், கடல் கூண்டுகளில் 40 சதவீதம் மானிய உதவியின் மூலம் கடல் மீன் வளர்ப்பு மேற்கொள்ள 8 கடல் மீனவர்களுக்கு பணி ஆணையும், மீன் விற்பனை செய்வதற்கு குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனத்திற்கு 40 சதவீதம் மானிய உதவியில் இரண்டாம் கட்ட மானியமாக ரூ. 4 லட்சத்திற்கான செயல்முறை ஆணை மீன் விற்பனையாளர் ஹென்றிக்கும் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu