ஏரல் பகுதியில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மாரிச்செல்வம் மற்றும் சிவா.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் இருந்து வாழவல்லான் செல்லும் சாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த வழியாக தனது கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்க செயினை மர்ம நபர்கள் இரண்டு பேர் பறித்துச் சென்றனர். இதுபோல் தொடர் செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது.
இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த தொடர் செயின் பறிப்பு சம்மந்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஏரல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
நகை பறைப்பு சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இருவர் இந்த தொடர் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்சாமி என்பவரது மகன் மாரிச்செல்வம் (வயது 22), மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சத்தியவாசகம் என்பவரது மகன் சிவா (வயது 22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து உருக்கி வைத்திருந்த திருட்டு நகைகள் மற்றும் திருட பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவருக்கும் வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu