ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணி : கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணி : கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்
X

ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அகழாய்வுப்பணியை தொடக்கி  வைத்தார் கனிமொழிகருணாநிதி எம்பி.

நாட்டில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அகழாய்வு பணியை கனிமொழி எம்பி தொடக்கி வைப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை கனிமொழி எம்பி இன்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூரில் தான் சுமார் 146 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது. கடந்த 2004ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் 2020-21 ம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 2019 மத்திய நிதிநிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1ம் தேதி மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலம் தனியாகப் பிரிக்கப்பட்டது. 160 மத்திய நினைவுச்சின்னங்கள் மற்றும் 21 மத்திய மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்களைக் கொண்ட திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கண்காணிப்பாளராக அருண் ராஜ் நியமிக்கப்பட்டார். இந்த மண்டலம் பிரிந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வந்தது. இதுதொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தொல்லியல் கண்காணிப்பாளர் அருண் ராஜ் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். முதல் கட்டமாக தொல்லியல் களத்தினையட்டிய இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட இடங்களைத் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண் ராஜ், தென் மண்டல இயக்குநர் பெங்களூர் மகேஸ்வரி, டெல்லி தொல்லியல் துறை நிர்வாக இயக்குநர் அஜய் அகர்வால், பொது இணை இயக்குநர் சஞ்சய் குமார் மஞ்சூர் உள்பட முக்கிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் இவ்விடத்தில் மத்திய அரசு இந்த வருடம் அகழாய்வு செய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையையும் திருச்சி தொல்லியல் துறை மண்டலம் சார்பில் அதிகாரிகள் எடுத்து வந்தனர். இந்த வருடம் மத்திய அரசு அகழாய்வு செய்வது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் டெல்லிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். தற்போது அதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது.

இதனால் இன்று திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரும், இந்த அகழாய்வு இயக்குநருமான அருண் ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகள் இன்று தொடங்கி உள்ளனர். இந்த அகழாய்வு பணி தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வு பணியைத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவருடன் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கனிமொழி கூறும் போது, ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆய்வுப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி போதுமானதாக இருக்காது, எனவே மத்திய அரசு இந்த தொகையை உயர்த்தும் என நம்புவோம் இவ்வாறு கூறினார்.

இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருட்கள் அதே இடத்தில் வைத்துக் காட்சிப்படுத்தப்படும். மேலும் இந்த இடத்தில் ஐரோப்பா மற்றும் சீனாவில் அமைந்துள்ள அருங்காட்சியகம் போல் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை முழுமையாகக் கண்ணாடியில் வைத்துக் காட்சிப்படுத்தப்படும். மேலும் மேல் பகுதியில் பிரமாண்டமாக செட் அமைத்து அனைத்து தரப்பட்ட மக்களும் பார்த்துச் செல்லும் படி, இந்த இடத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சிறு சிறு பொருட்கள், சென்னை, லண்டன், பெர்லின் போன்ற நகரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பொருட்கள் அனைத்தும் ஆதிச்சநல்லூருக்குக் கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துக் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நலிவோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், ஆதிச்சநல்லூர் பொருநை தொல்லியல் கழகம் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம் பண்ணை பஞ்சாயத்துத் தலைவர் சேக் அப்துல்காதர், தொல்லியல் பொறியாளர் கலைச் செல்வன், தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், முத்துக்குமார், தொல்லியல் பராமரிப்பாளர் சங்கர், நில அளவையர் குப்புசாமி, வரைவாளர் இராகவேந்திரா, விக்னேஷ் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!