ஏரல் அருகே இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை : 9 பவுன் நகைகள் கொள்ளை

ஏரல் அருகே இரும்பு கம்பியால் தாக்கி பெண் கொலை : 9 பவுன் நகைகள் கொள்ளை
X

முத்துக்கிளி (73)

ஏரல் அருகே இன்று அதிகாலையில் பெண்ணை கொலை செய்து 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள வாழவல்லான், மேலூர், நடுத் தெருவைச் சேர்ந்தவர் தனபாண்டி மனைவி முத்துக்கிளி (73). இவர் இன்று காலை 5.30 மணியளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், ஒரு பவுன் கம்மல், மற்றும் 3 பவுன் வளையல்கள் ஆகிய 9 பவுன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷன், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிட்டா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலை செய்யப்பட்ட முத்துக்கிளியின் உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகைக்காக இந்த கொடூர கொலை நடந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தினை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நகைக்காக பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!