தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டுபிடிப்பு…
கொங்கராயக்குறிச்சி பெயர்ப்பலகை.
தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதி உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னேரே இந்தப் பகுதியில் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாழ்ந்து உள்ளதாகக் அகழாய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
ஆதிச்சநல்லூரில் முதன் முதலில் அகழாய்வு பணிகள் மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வாளரான அலெக்சாண்டர் ரியா என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 37 இடங்களை தொல்லியல் இடங்கள் என்று குறிப்பிட்டுச் சென்றார். இருப்பினும், ஆதிச்சநல்லூர் பகுதியில் மட்டுமே அகழாய்வு பணிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, பல ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பு, சிவகளை உள்ளிட்ட பகுதிகளிலும், ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாகவும் தமிழக அரசு மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 8 முறை அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகழாய்வின்போது, பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, சுட்ட பானைகள், சுண்ணாம்பு மூலம் கட்டப்பட்ட சுவர், இரும்பு உள்ளிட்ட உலோகங்களால் ஆன ஆயுதங்கள், தங்க நெற்றிப் பட்டயம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. மேலும், பனை ஓலைகளில் எழுதப்பட்ட சுவடிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, கூம்பு வடிவிலான முதுமக்கள் தாழிகள், தட்டை வடிவிலான முதுமக்கள் தாழிகள், வில், அம்பு, கோரைப்புல் கொண்டு நெய்யப்பட்ட பாய்கள் உள்ளிட்டவையும் அகழாய்வின்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
மேலும், ஆதிச்சநல்லூர், சிவகளை, பரம்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை வைத்து காட்சிப்படுத்தும் வகையில் ஆதிச்சநல்லூரில் உலக்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துளளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆதிச்சநல்லூர் அருகே கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மேடான ஒரு பகுதியில் தோண்டிய தொழிலாளர்கள் அந்த இடத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் இருப்பதை கண்டனர்.
மேலும், அந்த இடத்தில் எலும்புகள், புழங்கு பொருட்கள், மண் விளக்குகள், பானைகள் கிடைத்துள்ளன. அதன் அருகே ஏராளமான எலும்புக் கூடுகளும் காணப்படுகிறது. இதையெடுத்து, தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
வெளிநாட்டு ஆய்வாளரான அலெக்சாண்டர் ரியா கூறிய 37 இடங்களில் கொங்கராயக்குறிச்சி பகுதியும் ஒன்றாகும். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் புதைக்கப்பட்ட இடம் கொங்கராயக்குறிச்சியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், கொங்கராயக்குறிச்சியில் ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றும் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu