தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி.
ஶ்ரீவைகுண்டம் அணையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீரின் இருப்பு குறித்தும் மற்றும் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது குறித்தும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று ஆய்தார்.
அப்போது, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:
பருவமழை இன்னும் தொடங்காத காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் வடக்கு பகுதியில் தண்ணீர் செல்கிறது. இதனை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள உறைகிணறுகளுக்கு கொண்டு சென்றால்தான் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்ய முடியும். விரைவிலேயே பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு மட்டுமல்லாது சுற்றியுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் ஒருங்கிணைத்து தூர்வாறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தொடர்ந்து, கடம்பாகுளம் நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியையும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu