ஶ்ரீவைகுண்டம் அணை நீரை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை குறைக்க நடவடிக்கை

ஶ்ரீவைகுண்டம் அணை நீரை தொழிற்சாலைகளுக்கு  வழங்குவதை குறைக்க நடவடிக்கை
X

ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மற்றும் நீரேற்றும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஶ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் நீரேற்றும் நிலையத்தையும், ஏரல் வட்டத்திற்குட்பட்ட குரங்கணியில் உள்ள நீரேற்றும் நிலையம் மற்றும் வாழவல்லான் தடுப்பணையையும் (தாமிரபரணி ஆற்றில்) மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேசன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது. ஶ்ரீவைகுண்டம் தாலுகாவில் இந்தப் பணிகளை இன்று பார்வையிட்டோம்.


சென்ற வருடம் பருவமழை தவறிய காரணத்தால் அணைகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஶ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மருதூர், ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். ஶ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு உறைகிணறு மூலம் தண்ணீர் வழங்குவதை இன்று பார்வையிட்டோம். மேலும், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரங்கணி, பொன்னன்குறிச்சி, வாழவல்லான் ஆகிய 5 இடங்களில் உறைகிணறு மூலம் குடிநீர் வழங்குவதை ஆய்வு செய்துள்ளோம்.

பனைமரங்களை பராமரிப்பதற்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் நடவடிக்கை எடுப்போம். பனைமரத்தை வெட்ட தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. கோட்டாட்சியர் ஆணை பெற்றுதான் வெட்ட முடியும். உடன்குடியில் 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து பனை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் 5000 விவசாயிகள் சேர்க்க உள்ளோம்.

ஒவ்வொரு வருடமும் 1 கோடிக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரித்து வேம்பார் முதல் உடன்குடி வரை உள்ள அனைத்து ஊராட்சிகளில் தூவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை மூலமாக நிறைய தடுப்பணைகள் கட்டியு உள்ளோம். மழைநீரினை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புன்னக்காயல், ஆத்தூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 3 தடுப்பணைகள் பொதுப்பணித்துறை மூலம் கட்டியுள்ளோம்.

ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஆத்தூர், சாத்தான்குளம், உடன்குடி, சாயர்புரம், பெருங்குளம் பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஸ்பிக் நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்கினால்தான் உரம் தயாரிக்க முடியும். தூத்துக்குடி அனல் மின்நிலையம் மூலம் தென்தமிழ்நாடு முழுவதற்கும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து இந்த 2 நிறுவனங்களுக்குத்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil