ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண குவியும் பள்ளி மாணவ, மாணவிகள்
ஆதிச்ச நல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிடும் பள்ளி மாணவ மாணவிகள்.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்காக மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
அகழாய்வு பணியில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் பி சைட்டில் உலகத்தரத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதற்காக ஆய்வுக்குழியில் எடுத்த பொருட்களை அப்படியே காட்சிப்படுத்தி அதன்மேல் உடைக்க முடியாத தரத்தில் கண்ணாடி பேழைகள் அமைக்கப்பட்டு அதன் மேல் நின்று பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அமைப்பு ஆதிச்சநல்லூரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சைட் மியூசியத்தினை கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த சைட் மியூசியத்தினை காண தினம்தோறும் வருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது தினம்தோறும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரை பார்வையிட வருகை தந்தனர். அவர்கள், ஆதிச்சநல்லூரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட முழுமையான எலும்புக்கூடுகளையும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்தில் அமைய உள்ள அருங்காட்சியகத்தின் மாதிரி வடிவமைப்பையும் பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் உள்ள சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் குறித்து நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார். அதை ஆர்வமுடன் கேட்ட மாணவ மாணவிகள் கேள்விகளையும் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர்களது சந்தேகத்தினை அவர் தீர்த்து வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu