ஸ்ரீவைகுண்டம் அருகே தாமதமாகும் சாலை அமைக்கும் பணிகள்: 7 கிராம மக்கள் பாதிப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமதமாகும் சாலை அமைக்கும் பணிகள்: 7 கிராம மக்கள் பாதிப்பு
X

தெருவின் நடுவே பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம்.

ஸ்ரீவைகுண்டம் அருகே சாலை மற்றும் பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் 7 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து பேய்க்குளம் வரையில் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தாதன்குளம், கிளாக்குளம், குருக்கல்கோட்டை, வல்லகுளம், அரசர்குளம், புதுக்குளம், மல்லல் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த அனைத்து கிராமங்களுக்கும் ஒரு மினி பேருந்து மூலம் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையில் அரசர்குளத்தில் இருந்து மல்லல் வரை சாலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த பகுதியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் சாலை புதுப்பிக்கும் பணியை தொடங்கியது. இதில் இரண்டு பாலங்களும், சாலைகளும் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பாலப்பணிகள் தோண்டி போட்ட பின்னர் தொடங்கவில்லை. இதனால் சாலைப்பணிகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், இந்த வழியாக அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் மினி பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அரசர்குளம் பகுதியில் உள்ள கல்குவாரி வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் கல்குவாரியில் வெடி வெடித்தால் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் பயணம் செய்கின்றனர்.

மேலும், கல்குவாரி மாலை நேரங்களில் அடைத்து விடும் சமயங்களில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலப்பணிகள் மற்றும் சாலைப்பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்