ஸ்ரீவைகுண்டத்தில் முறுக்கு வியாபாரி வெட்டிக் கொலை: பிளஸ் 1 மாணவர் உள்பட இருவர் கைது
கொலை செய்யப்பட்ட முறுக்கு வியாபாரி செந்தில்நாதன்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (43). இவர், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் செந்தில்நாதன் நேற்று மாலை தனது முறுக்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரது கடைக்குள் புகுந்த செந்தில்நாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
உடல் முழுவதும் அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த செந்தில்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கடைக்குள் இருந்த வியாபாரி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அங்கிருந்தோர் அலறியடித்தபடி ஓடினர். இந்த கொலை தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன், ஆய்வாளர் அன்னராஜ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலையுண்ட வியாபாரி செந்தில்நாதனின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், செந்தில்நாதன் கொலை சம்பவம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தில்நாதனின் மகன் படித்து வந்துள்ளார். அவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். மேலும், செந்தில்நாதன் தனது மகனை அடித்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் ஆத்திரத்தில் நேற்று இரண்டு மாணவர்களுடன் சேர்ந்த இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வியாபாரி செந்தில்நாதன் கொலை தொடர்பாக பிளஸ் 1 படிக்கும் மாணவர் மற்றும் கடந்த வருடத்தோடு பத்தாம் வகுப்பை முடித்த இளைஞர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ள ஸ்ரீவைகுண்டம் போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu