இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
X

ஸ்ரீவைகுண்டம் அருகே தடுப்பு வேலி அமைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் குடிநீர் தொட்டி.

ஸ்ரீவைகுண்டம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சின்னார்குளத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் சிதிலமடைந்தும், சில இடங்களில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தும் காணப்படுகிறது.

எனவே, பழுதான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நீர்த்தேக்கத் தொட்டி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால் 18 லட்சத்தில் 10 சதவீதம் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலுத்தினால் மட்டுமே பணிகள் தொடங்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் கிராம ஊராட்சியில் பணம் இல்லாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, பழுதான நிலையில் காட்சியளிக்கும் பழைய நீர்த்தேக்கத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் நீர்த்தேக்கத் தொட்டி அருகில் யாரும் செல்லாதவாறு சுற்றி கம்புகளை வைத்து தடுப்பு வேலி அமைத்து உள்ளனர்.

இதன் காரணமாக ராமானுஜர்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேறு பாதையில் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே தலையீடு செய்து புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்னார்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்