வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி.

வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மீட்ட கனிமொழி எம்.பி.
X

குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டி மகிழ்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடி அருகே வெள்ளத்தில் இருந்து மீட்டகப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தற்போது அந்த கிராமங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அறிவித்து இருந்த உதவி எண்ணிற்கு கடந்த 21 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியில் இருந்து கர்ப்பிணிப் பெண் அபிஷாவை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரசவ தேதியும் நெருங்கியது என்றும் அவரது குடும்ப உறுப்பினரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு, கனிமொழி எம்.பி. தனது வாகனத்தை கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு அனுப்பினார். மூன்றாம் தளத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்ட பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு 9 மணி அளவில் அபிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடிந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும், அவருக்கு மிக்க நன்றி என்று அபிஷா கூறி உள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியில் பெண் குழந்தை பெற்ற தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கனிமொழி எம்.பி நேற்று இரவு சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது குழந்தையை தன் கையால் வாங்கிய கனிமொழி எம்.பி அந்த குழந்தையின் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கனிமொழி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

Tags

Next Story