கனமழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
X

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

கனமழையினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீரால் சூழப்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம், போக்குவரத்து தடைபட்டு, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாத நிலை ஏற்பட்டு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது படிப்படியாக மழைநீர் வடிந்து வரும் நிலையில், சில இடங்களில் மழைநீர் மோட்டர் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, அமைச்சர்கள் பலர் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு இன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் அரிசி, பருப்பு, கோதுமை, பால், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், குடிதண்ணீர் பாட்டில், பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்ரீவைகுண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய இடங்களில் மழைநீர் அகற்றும் பணியை அமைச்சர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நேரடியாகச் சென்று, பொது மக்களுக்குப் பால் பாக்கெட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து புளியங்குடி கிராம மக்கள் அமைச்சரிடம், கிராமத்தை கடந்து செல்லும் பாலத்தை சீரமைத்துதரவும், வாய்க்காலை தூர்வாரவும் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கைகளை ஏற்று, பொதுமக்கள் தெரிவித்த பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீவைகுண்டம் பகுதி மழைநீரால் சூழப்பட்டு, பல கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய இரண்டு ஒன்றியத்திற்கும் அதிகாரிகளையும் மற்றும் சாலைப் பணியாளர்களையும் நியமித்து, நிவாரண முகாம்களில் சமையல் செய்யும் இடங்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், பிஸ்கெட், பிரட், கோதுமை, ரவா ஆகிய நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இன்றைய தினத்தில் இருந்து, காலை 20 பஞ்சாயத்துகள், மாலையில் 20 பஞ்சயாத்துகள் என்று பிரித்து, 20 அதிகாரிகளை நேரிடையாக நியமித்தார்கள். அவர்கள் மூலமாக, அரிசி, பருப்பு, கோதுமை, ரவா, சர்க்கரை, பிஸ்கெட், பிரட் மற்றும் குடிதண்ணீர் பாட்டில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பாக தயார் செய்து, 20 லாரிகளில், 20 பஞ்சாயத்துகளுக்கு காலையிலும், மாலையிலும் அனுப்பி வைக்கப்படும்.

சாலைகளைப் பொறுத்த வரையில், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதரச் சாலைகள் போன்ற சாலைகளை செப்பனிட, நான்கு கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!