தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஆய்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் பாலத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து, தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு பகுதியில் மருதூர் மேல் கால்வாய் பக்கப்பட்டி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் அதிக நீர்வரத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், பெருங்குளம் பேரூராட்சி கீழமங்கலக்குறிச்சியில் முழுவதும் சேதமான வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அங்குள்ள கோயிலுக்கு மண்டபம் கட்ட நிதியுதவியை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட வணிக பெருமக்களை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஏரல் மேம்பாலத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.
ஏரல் பேரூராட்சியில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கி இருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வாழவள்ளான் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் உதயநிதி பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu