ஏரல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
கேம்பலாபாத் பகுதியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் வட்டத்திற்குட்பட்ட கேம்பலாபாத், சேதுக்குவாய்த்தான் உட்பட பல்வேறு பகுதிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டார்.
மேலும், அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு பொருள் ஏற்பாடு, தண்ணீர் விநியோகம், மின்சார விநியோகம், நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அவர்களுக்கான அன்றாட தேவைகளை வழங்கும் வகையில் நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ளத்தில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது.
சாய்ந்த மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின் வயர்கள் சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் மருத்துவக் குழுவினர் பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேம்பலாபாத் பள்ளிவாசல், சேதுக்குவாய்த்தான் பள்ளிவாசல் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu