ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை: உறவினர்கள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை: உறவினர்கள் போராட்டம்
X

ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை செய்யப்பட்ட தொழிலாளி மணியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கீழுரைச் சேர்ந்தவர் மணி (60). இவர் கூலி தொழில் செய்து கொண்டு அவ்வப்போது ஆடு மேய்த்தும் வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்னனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் மணக்கரை ஊருக்கு கீழ்புறம் உள்ள மாடசாமி கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, அருகில் இருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் நேற்று மணி படுத்து தூங்கி கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்தனராம்.

சிறிது நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மழை வரும் என்பதை அறிந்து தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் மணி அயர்ந்து தூங்கியுள்ளார். அந்த சமயத்தில் திடீரென அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் அதிகமாக வெட்டு விழுந்துள்ளது.

அதன்பின்னர் அந்த வழியாக வந்த நபர் சத்தமிடமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவர் உடலை பெற்றுக் கொள்வோம் என்று ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தொழிலாளி மணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மணியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊரை காலி செய்து திருநெல்வேலி-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த ஊரில் உள்ள சாலையில் கயிறுகளை கட்டி பனை ஓலைகளை போட்டு போலீசார் சாலையை அடைத்து வைத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil