ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி: நாடாளுமன்றத்தில் கேள்வி.. கனிமொழி எம்பி பேட்டி
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளம் ஆகும். இந்த குளத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறன. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடம்பாகுளத்தின் கரை மற்றும் பாசன கால்வாய்களை பலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கடந்த ஆண்டு பெய்த மழையில் பொதுமக்களும், விவசாயிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கடம்பாகுளம், கால்வாய் குளம், தென்கரைகுளம் மற்றும் வெள்ளுர்குளங்களின் கரையை பலப்படுத்துதல், கால்வாய் குளத்தில் முன்புற கரை அமைத்தல், கால்வாய் குளத்தின் வரத்து கால்வாயின் கரையை பலப்படுத்துதல், கடம்பாகுளம், கால்வாய் குளம், தென்கரைகுளம் மற்றும் வெள்ளுர்குளங்களின் மடைகளை திரும்ப கட்டும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடம்பாகுளம் மற்றும் வெள்ளுர் குளங்களின் மறுகாலை மறுசீரமைத்தல் மற்றும் கூடுதலாக மணல்வாரிகள் கட்டும் பணிகள், புறையூர் கால்வாயின் தலைமதகினை மறுசீரமைத்தல், கடம்பா உபரிநீர் வடிகால் ஓடையில் புதியதாக 16 உள்வாங்கிகள் கட்டும் பணிகள். ஏற்கனவே உள்ள குறுகிய மற்றும் சிறிய பாலங்ககளை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள், கடம்பாகுளம், கால்வாய் குளம், தென்கரைகுளம், வெள்ளுர்குளம் மற்றும் கடம்பா உபரிநீர் வடிகால் ஓடையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள், சடையநேரி கால்வாயில் கெட்டியம்மாள்புரத்தில் அமைந்துள்ள தூம்பு குழாயினை மறுகட்டுமானம் செய்தல் என அனைத்து பணிகளும் இதில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்தப் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். அப்போது, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.
அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் பெற்று தந்தால் பணிகளை விரைவில் தொடங்குவோம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் முயற்சியாலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முயற்சியாலும் ஆதிச்சநல்லூரில் சங்கர் கணேஷ் என்பவர் தனது இடத்தினை வழங்கியுள்ளார்.
ஆனால் தற்போது வரை அந்த பணிகள் தொடங்கவில்லை. எனவே, வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து நான் கேள்வி எழுப்புவேன். மேலும் இது தொடர்பாக அமைச்சரையும் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவேன் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu