தொல்லியல் துறையின் திருக்களூர் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி.ஆய்வு
திருக்களூரில் அகழாய்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். அந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது கிடைக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காத ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்தனர்.
இதனையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக திருக்கோளூரில் வரலாற்றுக் கால கல்வெட்டுகளை சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில் அருகே மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த அகழாய்வின்போது வரலாற்றுக் காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 20 செமீ ஆழத்தில் ஐந்து வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல்கள் 26 செமீ நீளம் 18 செமீ அகலம் 8 செமீ உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக் குழியில் நான்கு தரைத்தளங்கள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நான்காம் தரைத்தளத்தில் அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப் பானை வகை ஓடுகள் கிடைக்கின்றன.
மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைக்க பெற்றுள்ளது.
இந்நிலையில், அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கனிமொழி எம்.பி. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், கள ஆய்வாளர் எத்திஸ்ராஜ் ஆகியோர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். பின்னர், சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu