காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அலுவலகத்தில் 6 மணி நேரமாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தங்கியிருந்து பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் தூத்துக்குடி டூவிபுரம் முதல் தெருவில் ஊர்வசி அமிர்தராஜ்க்கு தற்காலிக அலுவலகம் கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் தங்கியிருந்து கட்சி பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இங்கு சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு வந்த தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல இணை ஆணையர் சேகர் தலைமையில் எல்லை பாதுகாப்பு ராணுவப்படையினர் அலுவலகத்தை சுற்றிவளைத்து தேர்தல் பொது பார்வையாளர் குந்தன் யாதவ்க்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேர்தல் பொது பார்வையாளர் குந்தன் யாதவ் அலுவலகத்தை சோதனையிட வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தார்.

பின்னர் அங்கு வந்த 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியினர் பலர் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சோதனையில் சுமார் 5 லட்சத்து 17 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வட்டாட்சியர் சந்திரன் வீட்டிற்கு வெளியே பல மணி நேரம் நின்று கொண்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story