ஏரல் அரசு பெண்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை; பெற்றோர் போராட்டம்

ஏரல் அரசு பெண்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை; பெற்றோர் போராட்டம்
X

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டோர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையில் தண்ணீர் வராததை கண்டித்து மாணவிகளுடன் சேர்ந்து பெற்றோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சிறுதொண்டநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கட்டிடம் சரியில்லாததால் கட்டிடம் இடிக்கப்பட்டு பணிகள் சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அது சரி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டில் கழிவறை குறித்த விவரத்தை கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பள்ளிக்கு வந்து பள்ளியின் வாசலின் உள்பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து நாளை தற்காலிகமாக கழிவறையில் உள்ள பைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றும், மேலும் 10 தினங்களுக்குள் முழுமையாக புதிதாக பைப்புகள் மாற்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் காரணமாக ஏரல் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story
ai in future agriculture