ஸ்ரீவைகுண்டத்தில் டிராக்டர் மோதி விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
விபத்தில் உயிரிழந்த விவசாயி வள்ளிநாயகம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (65). விவசாயி. வள்ளிநாயகமும் அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெள்ளூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வருவதற்காக புதுக்குடி ரயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே ரயில்வே ஒப்பந்த பணிக்காக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோதியதில் பைக்கில் வந்த வள்ளிநாயகம், கருப்பசாமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளிநாயகம் அக்டோபர் 1 ஆம் தேதி உயிரிழந்தார். கருப்பசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரான சதீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்த வள்ளிநாயகத்திற்கு செல்லதாய் என்ற மனைவியும் கொம்பையா என்ற மகனும் வண்ணமதி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வட மாநில ஒப்பந்த பணியாளரின் அஜாக்கிரதையால் விபத்தில் சிக்கி வெள்ளூரை சேர்ந்த விவசாயி வள்ளிநாயகம் மரணம் அடைந்ததாகக் கூறியும், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியும் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் வள்ளிக்கண்ணு மற்றும் நம்பி குமார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu