ஸ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை: இருவர் கைது

ஸ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை: இருவர் கைது
X

கொலை செய்யப்பட்ட விவசாயி சொக்கலிங்கம்.

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டத்தில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராமமங்கலம் அப்பன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (73). விவசாயியான இவரது மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு வீரலட்சுமி, மீனாட்சி என்ற இரண்டு மகள்களும் கணேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சொக்கலிங்கம் வீட்டில் இருக்கும்போது அங்கே வந்த இரண்டு பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே சொக்கலிங்கம் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன், ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று சொக்கலிங்கம் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சொக்கலிங்கத்தின் தந்தை வைகுண்டராமனுக்கு ஆவுடையாச்சி, பொன்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததும் தெரியவந்தது.

அப்பன்கோவில் பகுதியில் உள்ள சொத்து தொடர்பாக சொக்கலிங்கத்திடம் வைகுண்டராமனின் இரண்டாவது மனைவி பொன்னம்மாள் மகன் சீனி என்பவரது மகன் பூல்பாண்டி மற்றும் ஒருவரோடு இணைந்து நேற்று இரவு பேசியபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதில் ஆத்திரமடைந்த பூல்பாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சொக்கலிங்கத்தை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலை தொடர்பாக பூல்பாண்டியையும் அவருடன் வந்த சாமிநாதன் என்பவரையும் ஶ்ரீவைகுண்டம் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்