குடிநீர் விநியோகம் விவகாரம்: பைக்கில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

குடிநீர் விநியோகம் விவகாரம்: பைக்கில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X

தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கும் அடுத்த ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்வது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு செய்தார். அப்போது, நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதியில் இருக்கின்ற சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதி மக்களுக்கு தண்ணீர் எந்த அளவுக்கு செல்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை, குடிநீர் வழங்கல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறையினருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தாமிரபரணி நதியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வல்லநாடு, பொன்னங்குறிச்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சாத்தான்குளம் பகுதிக்கு 308 குடிநீர் திட்டம் மூலம் 9 இடங்களிலும் திருச்செந்தூர் பகுதிக்கு 109 குடிநீர் திட்டம் மூலம் 5 இடங்களிலும் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதியில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் பகுதிக்கு தண்ணீர் எடுக்கப்படும் கிணறுகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளது. இந்த கிணறு அமைந்துள்ள நதி பகுதியில் வடக்கு ஓரத்தில் தண்ணீர் செல்கிறது.

அதனை தென் பகுதிக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் தண்ணீர் செல்லும் குழாய்களிலும் கசிவு ஏதும் உள்ளதா என்று ஆய்வு செய்து சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கும் தண்ணீர் விநியோகம் சீராக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!